கோட்டை
(ஒரு பகுதி)
வருகை
கா. வந்து சேர்ந்த போது மாலையாகிவிட்டது. கிராமம் கடும் பனியால் மூடியிருந்தது. மூடுபனியும் இருளும் சூழ்ந்திருந்ததால் கோட்டை இருந்த மலை தெளிவாக தெரியவில்லை; கோட்டை அங்கு இருப்பதின் அடையாளமாக ஒளியின் ஒரு மின்மினிப்பு கூட கண்ணிற்க்குத் தென்படவில்லை. கா. வெகு நேரம் பிராதான சாலையிலிருந்து கிராமத்துக்குச் செல்லும் மரப்பாலத்தின் மேல் நின்று கொண்டு எதிரே இருந்த மாயையான வெட்டவெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
பிறகு இரவு தங்குவதற்கான இடத்தை தேடினான்; விடுதி திறந்திருந்தது, ஆனால் அங்கு அறை ஒன்றும் காலி இல்லை. தாமதமாக வந்த விருந்தாளியை குழப்பத்துடன் பார்த்த விடுதியின் உரிமையாளர், அவனை வரவேற்பறையிலேயே ஒரு வைக்கோல் பையைப் போட்டு படுக்க அனுமதித்தார். கா. வும் அதற்க்கு ஒப்புக்கொண்டான். சில கிராம விவசாயிகள் இன்னும் பீயர் குடித்து கொண்டிருந்தார்கள். கா. யாரிடமும் பேச விரும்பவில்லை. பரண் மேல் இருந்த வைக்கோல் பை ஒன்றை எடுத்து, ஹீட்டர் அருகே விரித்து படுத்துக் கொண்டான். ஹீட்டர் அருகில் சூடு இதமாக இருந்தது; அவன் அமைதியாக இருந்த கிராம மக்களை களைப்பான கண்களால் பார்த்துக் கொண்டே சிறிது நேரத்தில் தூங்கிவிட்டான்.
ஆனால் சிறு வேளைக்குப்பிறகு எழுப்பப்பட்டான். ஒரு இளைஞன் நகரவாசி போல் உடை அணிந்து, நடிகனின் முகத்தைப் போல் அடர்ந்த புருவங்களும், குறுகிய கண்களுமாய் விடுதி உரிமையாளருடன் நின்றிருந்தான். அங்கிருந்த சிலர் நடக்கப்போவதை நன்றாகக் கேட்பதற்கும், பார்ப்பதற்கும் தங்கள் நாற்காலிகளைத் திருப்பி போட்டு உட்கார்ந்துக் கொண்டார்கள். - அந்த இளைஞன் கா. வை எழுப்பியதற்காக மிகவும் பணிவாக மன்னிப்புக் கேட்டான். கோட்டை காவலாளரின் மகன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பின்னர் கூறினான், “இந்தக் கிரமம் கோட்டைக்குச் சொந்தமானது, இங்கு நிரந்தரமாக வசிப்பவர்களானலும் சரி, ஓரிரவு தங்குபவர்களானாலும் சரி, கோட்டையிலே தங்குவதாக கருதப்படுவார்கள். ஆனால், கோமகனின் அனுமதி இல்லாமல் இங்கு தங்க முடியாது. அத்தகைய அனுமதிச்சீட்டு உங்களிடம் இல்லையா, அல்லது நீங்கள் அதை இவ்விடுதியில் காட்டவில்லையா?”
கா. படுத்த இடத்திலிருந்து ஓரளவு எழுந்து உட்கார்ந்து தலைமுடியை கோதிவிட்டுக் இருவரையும் பார்த்து, "நான் எந்த கிராமத்திற்க்குள் வழி அறியாமல் வந்திருக்கிறேன்? இங்கு கோட்டை இருக்கிறதா?” என்றான்.
"நிச்சியமாக," என்று இளைஞன் மெதுவாக பதிலளிக்கவே, அங்கும், இங்கும் ஒரிரு விவசாயிகள் கா. வின் கேள்விக்குத் தலை அசைத்தார்கள், "இது என் கோமகன் வெஸ்ட்-வெஸ்டினின் கோட்டை.”
கா., கேட்டது கனவல்ல என்று உறுதிப்படுத்த, “இந்த கிராமத்தில் தங்க அனுமதி வேண்டுமா?” என்றான்.
“அனுமதி அவசியம் வேண்டும்.” என்று பதில் அளித்த இளைஞனின் சைகையில் கா. வின் மேல் முரண்பட்ட அவமதிப்பு உணரமுடிந்தது; கையை பார்வையாளர்களிடம் நீட்டியபடி “அல்லது அனுமதி அவசியம் இல்லையா?” என்றான்.
“அப்படியானால் நான் இப்போதே போய் அனுமதி வாங்கி வரவேண்டும்,” என்ற கா., கொட்டாவி விட்டுக் கொண்டே போர்வையை தள்ளியபடி, எழுந்திருக்க முயன்றான்.
“யாரிடமிருந்து வாங்கப் போகிறீர்?” என்று இளைஞன் கேட்டான்.
“ஆளுனரிடமிருந்துதான்”, என்ற கா.,“அதை விட்டால் வேறு வழி இல்லை.”
“இந்த நடு இரவில் ஆளுனரிடமிருந்து அனுமதி வாங்குவதா?” என்று உறக்க கூறியவாரே ஒரு அடி பின் வைத்தான், இளைஞன்.
“ஏன் முடியாதா? பின் ஏன் என்னை எழுப்பினாய்?" என்று கா. நிதானமாக கேட்டான்.
இதைக் கேட்ட இளைஞன், கோபத்தில் துடித்தான். "உங்கள் கீழ்த்தரமான புத்தியை காட்டாதீர்! கோமகனின் அதிகாரத்திற்கு மதிப்பு கொடுத்தாக வேண்டும் என வலியுறுத்துகிறேன்! நீங்கள் உடனடியாக இந்த ஊரை விட்டு சென்று விட வேண்டும், என்று சொல்லத்தான் உங்களை எழுப்பினேன்,” என்றான்.
“போதும் இந்த விளையாட்டெல்லாம்!” என்றான் கா. அமைதியாக. “நீ தேவை இல்லாமல் வரம்பு மீறுகிறாய்,” என்று சொல்லிக்கொண்டே கா. தனது போர்வையை இழுத்து மூடி மீண்டும் படுத்துக் கொண்டு, “நான் உன் நடத்தையைப் பற்றி நாளை புகார் செய்ய வேண்டியிருக்கும். சாட்சிக்கு, தேவைப்பட்டால் விடுதி உரிமையாளரும் இங்கு உள்ளவர்களும் இருக்கிறார்கள்,” என்றான். “ஒரே ஒரு விஷயம் மட்டும் உனக்கு சொல்கிறேன், ஆளுநர் எதிர்பார்க்கும் நில அளவையர் நான் தான்.”
“என்னுடைய உதவியாளர்கள் நாளை வண்டியில் ஆய்வுக் கருவிகளுடன் வருகிறார்கள். நான் பனியில் நடந்து வரும் வாய்ப்பை இழக்க விரும்பவில்லை; ஆனால் எதிர்பாராமல் பல முறை வழி தவறியதால், தாமதமாகிவிட்டது.”
“நீ வந்து அறிவிக்கும் முன்பே எனக்கு நன்றாகத் தெரியும் நேராக கோட்டைக்கு செல்ல மிகவும் தாமதமாகிவிட்டது என்று. அதனால்தான் இன்று இரவு நான் இங்கு தூங்க முடிவு செய்தேன், ஆனால் நீ இங்கு வந்து, -- நாகரிகமாக சொல்ல வேண்டும் என்றால் -- என்னைத் தேவையில்லாமல் தொந்தரவு செய்தாய். நான் சொல்ல வேண்டியது அவ்வளவுதான். குட் நைட், ஜென்டில்மென்” என்ற கா. ஹீட்டரை நோக்கி திரும்பி படுத்தான்.
“நில அளவையரா?” தயக்கமாக கேள்வி அவன் பின் கேட்டது, பின்னர் அமைதி நிலவியது. ஆனால் அந்த இளைஞன் விரைவிலேயே அதே உறுதியுடன் கா. வின் தூக்கத்தைக் கருத்தில் கொண்டு, குரலைத் தாழ்த்தினாலும், தெளிவாகக் கேட்கும் அளவுக்கு, சத்தமாக விடுதி உரிமையாளரிடம், "நான் தொலைபேசியில் விசாரிக்கிறேன்" என்று கூறினான்.
என்னது, இந்த கிராமத்து விடுதியில் தொலை பேசியா? எல்லாமே நன்றாகத் தான் வைத்திருக்கிறார்கள். ஆச்சரியமடைந்தாலும் கா. ஒரு வகையில் அதை எதிர்பார்திருந்தான்.
தொலைபேசி அவன் படுத்திருந்த இடத்தில், தலைக்கு மேல் வைக்கப்பட்டிருந்தது, தூக்க கலக்கத்தில் அதை அவன் கவனிக்கவில்லை.
அந்த இளைஞனுக்கு தொலைபேசி தேவை என்றால், எவ்வளவு நல்ல நோக்கத்துடன் முயற்சி செய்தாலும் கா. வை தொந்தரவு செய்வதைத் தவிர்க்க முடியாது; கா. அதை அனுமதிப்பானா என்பது தான் கேள்வி, அவன் அதை அனுமதிக்க முடிவு செய்தான். தூங்குவது போல் நடிப்பதில் அர்த்தம் இல்லை என்பதால் அவன் இளைஞனை நோக்கி திரும்பினான்.
விவசாயிகள் அனைவரும் நடந்த விஷயத்தைப் பற்றி இணைந்து பேசிக்கொள்வதை அவன் பார்த்தான், நில அளவையரின் வருகை ஒரு சிறிய நிகழ்வு அல்ல. சமையலறையின் கதவு திறக்கப்பட்டது, முழு வாசலையும் அடைத்தப்படி கம்பீரமான உருவம் உடைய உரிமையாளரின் மனைவி நின்றுகொண்டு இருந்தாள்; அவளிடம் என்ன நடக்கிறது என்று கூறுவதற்காக உரிமையாளர் மெதுவாக சத்தமில்லாமல் நடந்து சென்றார்.
தொலைபேசியில் உரையாடல் தொடங்கியது.
கோட்டை காவலாளார் தூங்கிக் கொண்டு இருந்தார்; ஆனால், துணை பாதுகாவலர்களில் ஒரு ஹெர் ஃபிரிட்ஸ் என்பவர் இருந்தார். இளைஞன் தொலைபேசியில் தன்னை ஷ்வார்ட்ஸர் என்று அறிமுகப் படுத்திக் கொண்ட பிறகு, கா. என்ற சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க, இழிவான தோற்றமுடைய ஒருவர் அமைதியாக ஒரு வைக்கோல் படுக்கையில், ஒரு மிக சிறிய பையை தலையணையாக வைத்துக் கொண்டு, கை எட்டும் தூரத்தில் ஒரு கம்பை வைத்து அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்ததை கண்டு பிடித்ததாக விளக்கினான்.
அவன் தோற்றத்தைப் பார்த்தது அவனுக்கு கா. மீது இயல்பாக சந்தேகம் வந்ததாகவும், மேலும் விடுதி உரிமையாளர் தனது கடமையை செய்யாததால், ஷ்வார்ட்ஸர் இந்த விஷயத்தை விசாரிக்க கடமைப்பட்டிருந்தான் என்றும், அவன் கா. வை எழுப்பி, விசாரித்து, கோமகனின் எல்லையை விட்டு உடனே கிளம்பும் படி அவனை எச்சரித்ததாகவும், தான் நியாயமாக கோமகனின் அழைப்பின் பேரில் வந்த நில அளவையர்தான் என்று கா. கோபம் கொண்டதாகவும், தொலைபேசியில் விவரித்தான்.
நிச்சயமாக குறைந்தபட்சம் அவன் அறிக்கையை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த வேண்டும் என்பதால் ஷ்வார்ட்ஸர் ஹெர் ஃபிரிட்ஸிடம் மத்திய பணியகத்திலிருந்து நில அளவையர் உண்மையிலேயே எதிர்பார்க்கப்படுகிறாரா என்று விசாரிக்கும்படியும், பதிலை உடனடியாக தொலைபேசியின் மூலம் அறிவிக்கும்படியும் கேட்டுக்கொண்டான்.
பின்னர் அங்கு அமைதி நிலவியது, ஃபிரிட்ஸ் மத்திய பணியகத்தை கூப்பிட்டு விசாரித்துக் கொண்டிருக்கும் போது விடுதியில் எல்லோரும் பதிலுக்காக காத்திருந்தனர். கா. மட்டும் அசையாமல், ஆர்வமில்லாமல் உற்று பார்த்துக் கொண்டு இருந்தான். ஷ்வார்ட்ஸர், தீமை கலந்த விவேகத்தோடு தனது கதையைச் சொன்ன விதம், அவனை போன்ற கோட்டையின் கீழ் நிலைபணியாளர்கள் கூட சாதுரியத்தை எவ்வளவு நன்கு உபையோகிக்கத் தெரிந்தவர்கள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. அவர்கள் வேலை செய்வதிலும் குறை ஒன்றும் இல்லை. மத்திய அலுவலகம் இரவிலும் சேவை செய்வது மட்டும் அல்லாமல் கேள்விகளுக்கும் உடனடி பதிலும் அளித்தது, எனெனில் ஃபிரிட்ஸிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்த அழைப்பு உடனே வந்தது. பதில் சுருக்கமாக இருந்தது. ஷ்வார்ட்ஸர் ரிசீவரைத் வைத்து விட்டு, கோபமாக, “நான் ஏற்கனவே சொன்னேன். நில அளவையராக இருப்பதற்கான ஒரு அறிகுறி கூட இல்லை! சாதாரண பொய் சொல்லி திரியும் நாடோடி!” இதைக் கேட்டதும் கா. விற்கு ஒரு வினாடி ஷ்வார்ட்ஸர், மற்றும் அங்கிருந்த அனைவரும், விவசாயிகள், விடுதி உரிமையாளர், அவர் மனைவி யாவரும், சேர்ந்து தன் மீது பாயப் போகிறார்கள் என்று பயந்து அவ்வாறு உடலின் மேல் அவர்கள் விழும் அதிர்ச்சியை தவிர்க்க போர்வைக்குள் நுழைந்து கொண்டான்.
அப்போ̀து மீண்டும் தொலைபேசி, கா. விற்கு ஒரு வலியுறுத்தலோடு ஒலித்தது போல் தோன்றியது. அவன் மெதுவாக போர்வைக்குள்ளிருந்து தலையை தூக்கினான். ஆனால் அது திரும்ப கா. வின் விஷயமாக இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தாலும் அவர்கள் அனைவரும் அமைதியானார்கள். ஷ்வார்ட்ஸர் மீண்டும் தொலைபேசியை எடுத்தான். வெகு நேரம் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான். பிறகு மெல்லிய குரலில் “அப்படியா? தவறா? எனக்கு மிக சங்கடமாக இருக்கிறது. அலுவலக தலைவரே ஃபோன் செய்து சொன்னாரா? விசித்திரம், விசித்திரமாக இருக்கிறது. இதை நான் எப்படி நில அளவையருக்கு விளக்கப் போகிறேன்?” என்றான்.
கா. கவனமாக காது கொடுத்துக்கேட்டான். கோட்டை அவனை நில அளவையராக அங்கீகரித்திரிக்கிறது. ஒருபுறம், அது அவனுக்கு சாதகமற்றதாகி விட்டது, ஏனென்றால் கோட்டை அவனைப் பற்றி நன்கு அறிந்திருக்கிறது, அனைத்து சாத்தியமான விளைவுகளையும் மதிப்பிட்டு, புன்னகையுடன் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளது. மறுபுறம், அது அவனுக்கு சாதகமாகவும் இருந்தது, ஏனென்றால் அவனது கருத்துப்படி அவர்கள் அவனைக் குறைவாக மதிப்பிட்டதாக அது நிரூபித்தது, ஆதலால், எதிர்பார்த்ததை விட இப்போது அவனுக்கு அதிக சுதந்திரம் கிடைத்துள்ளது. மேலும், அவர்களின் உயர்ந்த நிலையால் அவனை நில அளவையராக அங்கீகரித்து, அவனை தொடர்ந்து பணிவுடனும் பயத்துடனும் வைத்திருக்க முடியும் என்று அவர்கள் நினைத்தால், தவறாக புரிந்துகொண்டு இருக்கிறார்கள், அது அவனை கொஞ்சம் உறுத்தியது, அவ்வளவுதான்.
(மொழிபெயர்ப்பு: டாக்டர் ஹம்சவாஹினி சிங்)
Übersetzung: Dr. Hamsavahini Singh
Vorgelesen von: Sabthika Mathanamohan